தமிழ்நாடு

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 கிராமங்களில் தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள்

Published On 2024-04-19 06:16 GMT   |   Update On 2024-04-19 06:56 GMT
  • வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.
  • வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட அக்ரஹார ஊராட்சியில் உள்ள கடவரஅள்ளி கிராமத்தில் இன்று காலை வாக்கு பதிவுக்கான பணிகள் நடைபெற்று தயார் நிலையில் இருந்தன.

ஆனால், கடவரஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:

கடவரஅள்ளி கிராமமானது வனபகுதியையொட்டி உள்ளது. இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மேலும், இந்த பகுதியில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் இன்று நடைபெறுகிற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக ஒருவர் கூட நாங்கள் வாக்களிக்கவில்லை என்றனர்.

இதேபோல் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.

மேலும், அந்த பகுதியில் 1050 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சாலையை கடக்கும் விதமாக எந்தவித மேம்பாலமும் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் 4 வழிச்சாலை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் இன்று தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.

இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே காரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கச்சுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் ஒருவர் கூட காலை 7 மணி முதல் 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, கச்சுவாடி பகுதியில் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்றனர்.

இந்த பகுதியில் 961 பேர் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags:    

Similar News