தக்காளி விலை தொடர்ந்து சரிவு- கிலோ ரூ.50-க்கு விற்பனை
- கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
- மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
போரூர்:
தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.200வரை விற்கப்பட்டது.
இதனால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியை குறைந்த அளவே பயன்படுத்தும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டனர்.மேலும் தக்காளி விலை உயர்வு காரணமாக பல ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி ரசம் ஆகியவை அதிரடியாக நிறுத்தப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 55 முதல் 60 லாரிகள் வரை தினசரி தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்தமாதம் மழையால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து 25 லாரிகளாக குறைந்ததால் விலை திடீரென அதிகரித்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இதனால் கடந்த வாரத்தில் தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. இந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 43 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தன. இதனால் தக்காளியின் விலை மேலும் சரிந்து மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.