மதுரை தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் 500 பேர் கைது
- மதுரை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கின.
- மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
மதுரை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களின் பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 98 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பஸ் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று முதல் (9-ந் தேதி) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில் இதர தொழிற்சங்கத்தினர் பணிக்கு வந்ததால் மதுரை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கின.
இந்த நிலையில் போக்குவரத்து பணிமனை முற்றுகை, மறியல் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன. இதையடுத்து மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அங்கு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்கள் பணிமனைக்குள் செல்லாதவாறு பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் திடீரென பைபாஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.