தமிழ்நாடு

சொந்த ஊர்களுக்கு செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு

Published On 2024-01-02 05:47 GMT   |   Update On 2024-01-02 05:47 GMT
  • சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
  • பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை:

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக செல்லும் ரெயில், சிறப்பு ரெயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரெயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்களை இணைத்து உள்ளனர்.


மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.

விரைவில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட இருப்பதால் அதற்கான முன்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்பவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

இதற்கான தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுவதால் பயணிகள் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்சார ரெயில்களில் பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும்.

இது பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News