வைகை அணையிலிருந்து 5224 கனஅடி நீர் திறப்பு... கரையோர 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
- ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 382.31 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர், அரசரடி உள்ளிட்ட கிராமங்களில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 3-வது முறையாக அணையின்நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர்முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று பகல்பொழுதில் திடீரென கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து 5224 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவில் நீடிப்பதால் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 5-வது நாளாக 71 அடியில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே நீர்வரத்து மற்றும் இருப்பு அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. அணைக்கு 1702 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து நீர்திறப்பு இன்று காலை நிறுத்தப்பட்டது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. அணைக்கு 281 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 382.31 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.