வனத்துறையினர் கெடுபிடியை கண்டித்து சதுரகிரி மலையில் தங்கி 84 பழங்குடியின குடும்பங்கள் போராட்டம்
- ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் கடைகள் வைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி சதுரகிரி பழங்குடியினத்தை சேர்ந்த 84 குடும்பங்கள் கடந்த 9-ந்தேதி முதல் சதுரகிரி மலையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியான சதுரகிரி மலை மேல் பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர்.
அவர்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் மலை அடிவாரத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்தனர். பழங்குடியின மக்களுக்காக அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அடிவாரத்திற்கு வந்த பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாரத்திற்காக சதுரகிரி மலைக்கு சென்று தேன், கிழங்கு, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்று வந்தனர்.
இந்த நிலையில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை புலிகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் வத்திராயிருப்பு, சதுரகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட மலை பகுதிகளை வனத்துறையினர் தங்களது தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்தனர். சதுரகிரி மலைக்கு சென்று பொருட்களை சேகரிக்கவும் பழங்குடியின மக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
மேலும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் மலை பாதைகளில் கடைகள் வைக்கவும் பழங்குடியின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். மலை பகுதிகளில் உள்ள தங்களது பாரம்பரிய உரிமையை உறுதி செய்ய வேண்டும். மீண்டும் மலையில் பொருட்களை சேகரிக்கவும், கடைகள் அமைக்கவும் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக புகார் அளிக்க வந்த பழங்குடியினரையும் வனத்துறையினர் விரட்டி அவர்களின் பொருட்களை சேதப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதுரகிரி பழங்குடியினத்தை சேர்ந்த 84 குடும்பங்கள் கடந்த 9-ந்தேதி முதல் சதுரகிரி மலையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளுடன் சென்ற அவர்கள் அங்கேயே சமைத்து தங்கி உள்ளனர். சதுரகிரி மலைக்கு மேலே உள்ள குத்துக்கல், பூலாம்பாறை ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 4-வது நாளாக இன்றும் பழங்குடியின மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வனத்துறையினரின் கெடுபிடியை கண்டித்து பழங்குடியின மக்கள் நடத்தும் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் கடைகள் வைக்க வனத்துறையினர் தடை விதித்தனர். கடைகள் வைக்க அனுமதி வழங்க கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மலை அடிவாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.