சுபமுகூர்த்தம் எதிரொலி- கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பஸ்கள்
- சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- வருகிற வெள்ளிக்கிழமை பயணம் செய்ய 6 ஆயிரம் பேரும், சனிக்கிழமை பயணத்திற்கு 7 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
கோடை விடுமுறை காலம் என்பதால் வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் நேர பயணத்தை தவிர்த்து இரவில் பயணிக்கிறார்கள்.
தற்போது சுபமுகூர்த்த நாட்களும் வருகின்றன. 3 மற்றும் 5-ந்தேதி விசேஷ நாட்களாக இருப்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 3-ந்தேதி 290 பஸ்களும், 4-ந்தேதி 365 பஸ்களும் இயக்கப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3,4-ந்தேதியில் 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in. மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமை பயணம் செய்ய 6 ஆயிரம் பேரும், சனிக்கிழமை பயணத்திற்கு 7 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.