வெள்ளி, சனிக்கிழமைகளில் கூட்ட நெரிசலை குறைக்க 945 சிறப்பு பஸ்கள்
- பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
வார இறுதி நாளான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை-புறநகர் பகுதியில் இருந்து வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கி வருகின்றன.
வார விடுமுறை தினங்களான நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 265 பஸ்கள், (சனிக்கிழமை) 325 பஸ்கள் இயக்கப்படும்.
இதுபோல, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 65 பஸ்கள், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 15 என மொத்தம் 945 பஸ்கள் இயக்கப்படும்.
இதுதவிர ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்தார்.