தமிழ்நாடு (Tamil Nadu)

இன்று மாலை கூட்டம் நடக்கிறது: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை தெறிக்க விடும் பொறுப்பாளர்கள்

Published On 2023-11-21 08:59 GMT   |   Update On 2023-11-21 08:59 GMT
  • தாங்கள் உள்ளதை உள்ளபடி பொதுச்செயலாளருக்கு தெரிவிப்போம் என்று கூறிவிட்டதால் சில மாவட்ட செயலாளர்கள் திக்கி திணறியதாக கூறப்படுகிறது.
  • பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ள விவரம், எங்கெங்கு என்ன பிரச்சனை என்பது பற்றி கேட்டு அதை எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி வருகிறார்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டிகள் அமைத்து இருக்கும் விபரங்கள் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று மாலையில் ஆலோசனை நடத்துகிறார்.

ஒவ்வொரு பூத்திலும் 3 விதமான கமிட்டிகள் அமைப்பது, கமிட்டிகளில் எவ்வளவு உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்? உறுப்பினர்களை தேர்வு செய்வது எப்படி? பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டியது எப்படி? என்று ஏற்கனவே ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது.

இது தவிர ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி நியமித்து இருந்தார். அவர்கள் பூத்வாரியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும், பூத் கமிட்டி உறுப்பினர்கள் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்களா? போலி, பொய்யான தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளதா? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.

இன்று மாலையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பூத் கமிட்டி பட்டியல்கள், அந்த விவரங்கள் அடங்கிய 'பென் டிரைவ்' ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கிறார்கள். அதை தொடர்ந்து 82 மாவட்டங்களின் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதற்கிடையில் நேற்று மாலை முதல் ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களையும் தனது வீட்டுக்கு வரவழைத்து தனித்தனியாக விபரம் கேட்டு வருகிறார்.

பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ள விவரம், எங்கெங்கு என்ன பிரச்சனை என்பது பற்றி கேட்டு அதை எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி வருகிறார். இன்று மாலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அனைவரையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் இளம் நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவர்கள், அவர்கள் மாவட்டச் செயலாளர்கள் சொல்லும் விபரங்களை முழுயாக நம்புவதில்லை. கள ஆய்வை நேரடியாக நடத்தி மாவட்ட செயலாளர்களை தெறிக்கவிட்டு உள்ளனர்.

தாங்கள் உள்ளதை உள்ளபடி பொதுச்செயலாளருக்கு தெரிவிப்போம் என்று கூறிவிட்டதால் சில மாவட்ட செயலாளர்கள் திக்கி திணறியதாக கூறப்படுகிறது. இன்று மாலையில் ஒவ்வொரு மாவட்ட செயலாளரையும் அந்த மாவட்ட பொறுப்பாளரையும் அமர வைத்து நிலவரங்களை கேட்க திட்டமிட்டுள்ளார். அப்போது மாவட்ட செயலாளரும், பொறுப்பாளரும் தகவல்கள் ஒத்து போனால் பிரச்சனை இல்லை. முரண்பாடுகள் இருந்தால் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மாவட்ட செயலாளர்கள் தவிக்கிறார்கள்.

Tags:    

Similar News