தமிழ்நாடு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு- ஒரு வாரத்திற்கு பிறகு வைகை அணையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

Published On 2023-04-26 05:48 GMT   |   Update On 2023-04-26 05:48 GMT
  • கடந்த ஒரு வாரமாக நடந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் இன்று ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்று மீன்களை அள்ளி வந்தனர்.
  • ஒப்பந்த அடிப்படையில் மீனவர்களுக்கு மீன்களும் வழங்கப்பட்டதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை நீர்தேக்கத்தில் ஏராளமான மீனவர்கள் மீன்குஞ்சுகளை விட்டு மீன்களைபிடித்து வந்தனர். வைகைஅணையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு பங்கீடு அடிப்படையில் மீன்பிடிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. மீன்வளத்துறை சார்பில் வைகை அணையில் மீன்பிடிக்கும் ஒப்பந்தப்புள்ளி மூலம் கடந்த 1-ந்தேதி முதல் தனியாருக்கு வழங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒப்பந்ததாரர் சார்பில் மீன்பிடிப்பதற்கு வழங்கப்படும் கூலி போதுமானதாக இல்லை என்றும் , சம பங்கீட்டில் மீன்கள் வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் திருமுருகன், மீன்வளத்துறை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் பஞ்சராஜா, டி.எஸ்.பி ராமலிங்கம், எம்.எல்.ஏ மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் அணையில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு இயற்கையாக வளரும் ஜிலேபிரக மீன்களை சமபங்கு என்ற அடிப்படையிலும், கட்லா, ரோகு, மிருகால் போன்ற வளர்ப்பு மீன்களை 3ல் ஒரு பங்கு என்ற அடிப்படையிலும் ஒப்பந்ததாரர் சார்பில் பிரித்து வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.

கடந்த ஒரு வாரமாக நடந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் இன்று ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்று மீன்களை அள்ளி வந்தனர். ஒப்பந்த அடிப்படையில் மீனவர்களுக்கு மீன்களும் வழங்கப்பட்டதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். போராட்டத்தால் கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடி கிடந்த வைகை அணை பகுதி இன்று மீண்டும் களைகட்டியது.

Tags:    

Similar News