தமிழ்நாடு

சிவகங்கையில் இன்று அனைத்து கட்சி சார்பில் ரெயில் மறியல்-கடையடைப்பு: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

Published On 2023-09-23 06:13 GMT   |   Update On 2023-09-23 06:13 GMT
  • போலீசாரின் பாதுகாப்பையும் மீறி ரெயில் நிலையத்திற்குள் சென்றவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
  • போராட்டம் காரணமாக ரெயில் புறப்படுவதில் 1 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட தலைநகராக சிவகங்கை இருந்து வருகிறது. இதன் வழியாக பல்வேறு ரெயில்கள் சிவகங்கை வழியாக சென்றபோதிலும் சிவகங்கை நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் சிவகங்கையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பொதுமக்கள் ரெயில் வசதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும், தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சிவகங்கை மக்கள் நீண்ட காலமாக முன் வைத்து வருகின்றனர்.

இருப்பினும் ரெயில்வே நிர்வாகம் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், கடையடைப்பு நடத்துவது என வணிகர்கள், அனைத்து கட்சியினர் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று (23-ந்தேதி) ரெயில் மறியல், கடையடைப்பு நடத்தப்படும் என அனைத்து அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கம், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து அறிவித்தனர்.

இதையடுத்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சமரச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோட்டாட்சியர் சுகிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிவகங்கை நகரசபை தலைவர் துரை ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் உள்பட அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இருப்பினும் இந்த கூட்டத்தில் ரெயில்வே திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கப்படாததால் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று அனைத்து கட்சியினர், வணிகர்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதன் காரணமாக சிவகங்கை நகர் பகுதியில் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய சாலைகள், தெருக்கள், பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனிடையே ரெயில்வே திட்டங்களை செயல்படுத்தக்கோரி இன்று காலை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் மற்றும் அனைத்து கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

போலீசாரின் பாதுகாப்பையும் மீறி ரெயில் நிலையத்திற்குள் சென்ற அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த ரெயில் சிவகங்கை ரெயில் நிலையத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது.

போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

போராட்டம் காரணமாக ரெயில் புறப்படுவதில் 1 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. கடையடைப்பு, மறியலையொட்டி நகர்ப்பகுதி முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதற்காக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News