தமிழ்நாடு

கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்- அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published On 2023-05-20 06:34 GMT   |   Update On 2023-05-20 06:34 GMT
  • தமிழகத்தில் இரண்டாவது அலையில் மட்டும் அதிகாரப்பூர்வமாக 19 லட்சத்துக்கும் கூடுதலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
  • மருத்துவர்களின் சேவைகளை மதித்தும், சமூகநீதியை கருத்தில் கொண்டும் 1021 மருத்துவர்கள் நியமனத்தின் போது, கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு 1021 மருத்துவர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசு மருத்துவர்களை தேர்ந்தெடுக்கும் போது, 2021-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் குறைந்தது 100 நாட்கள் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்திருக்கும் போதிலும், அதன்படி கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ஆள்தேர்வு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படாதது வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.

தமிழகத்தில் இரண்டாவது அலையில் மட்டும் அதிகாரப்பூர்வமாக 19 லட்சத்துக்கும் கூடுதலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் மருத்துவப் பணியாற்றியது மிகவும் சவாலானது ஆகும். தங்களின் குடும்பத்தினரை மாதக்கணக்கில் பிரிந்திருந்து, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய மருத்துவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும்.

அதனால், இப்போதும் கூட மத்திய அரசு பரிந்துரைத்தவாறு கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஆணை பிறப்பிக்கலாம். மருத்துவர்களின் சேவைகளை மதித்தும், சமூகநீதியை கருத்தில் கொண்டும் 1021 மருத்துவர்கள் நியமனத்தின் போது, கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News