தமிழ்நாடு (Tamil Nadu)

என்.எல்.சி. நிலம் எடுக்க எதிர்ப்பு- கடலூர் மாவட்டத்தில் நாளை அன்புமணி நடைபயணம்

Published On 2023-01-06 05:47 GMT   |   Update On 2023-01-06 05:47 GMT
  • என்.எல்.சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும்.
  • கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் சாதாரணமானவை அல்ல. அவை முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்.எல்.சி நிறுவனம் அதன் முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களையும், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் இருந்து 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்த உள்ளது.

இவை தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12 ஆயிரத்து 125 ஏக்கர் நிலங்களை பறிக்க உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் போதிலும் என்.எல்.சி நிறுவனம் அதன் முயற்சிகளை கைவிடவில்லை. கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்.எல்.சி தீவிரப்படுத்தி வருகிறது.

என்.எல்.சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் சாதாரணமானவை அல்ல. அவை முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும்.

ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக்கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறித்து விட்டு, அவற்றின் உரிமையாளர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் துடிப்பதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.

விவசாயத்தை அழித்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக 1985-ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் 37 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தபடவில்லை. ஆனாலும், இன்னும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி துடிப்பதற்கு பின்னால் வேறு காரணங்கள் உள்ளன. தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ள என்.எல்.சி, அதற்கு முன்பாக 25,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி அதையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டிருக்கிறது.

விவசாயத்தை அழித்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை.

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களை பறிக்கும் முயற்சியை வீழ்த்த வேண்டும். கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நாளை ஜனவரி 7 மற்றும் நாளை மறுநாள் 8 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். நாளை காலை வானதிராயபுரத்தில் தொடங்கும் பிரச்சார எழுச்சி நடைபயணம், தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி வழியாக நாளை மறுநாள் ஜனவரி 8-ந்தேதி மாலை கரிவெட்டி கிராமத்தில் நிறைவடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News