ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- ஆற்காடு சுரேஷ் தம்பி உள்பட 5 பேரை மீண்டும் காவலில் எடுக்கும் போலீசார்
- ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
- ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கொலை சதியின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளை ஏற்கனவே போலீசார் 2 முறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் சிக்கி உள்ளனர்.
இதனை தொடர்ந்து பொன்னை பாலு உள்பட மேலும் 5 பேரை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்படி பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிஹரன், சிவா ஆகிய 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல தகவல்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் காவலில் எடுப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவாக உள்ள வக்கீல் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்கள் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே போலீசார் 3 பேரையும் தேடுகிறார்கள்.
பொன்னை பாலு உள்பட 5 பேரை காவலில் எடுக்கும் போது இவர்கள் 3 பேர் பற்றியும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.