சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்- பயணிகள் தவிப்பு
- ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
சேலம்:
விபத்துகளில் சிக்கும் டிரைவர்கள் மீது 10 ஆண்டுகள் சிறை, 7 லட்சம் அபராதம் என்ற மத்திய அரசின் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை குறைக்க வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண்டும், ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆட்டோ டிரைவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை முதல் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை இயக்காமல் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சேலத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் இன்று ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர். இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
பள்ளி மாணவிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களில் சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டனர். மேலும் ஆட்டோக்களில் அலுவலகங்களுக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்தனர்.