தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் பீன்ஸ், தக்காளி விலை உயர்வு

Published On 2024-10-04 06:44 GMT   |   Update On 2024-10-04 06:44 GMT
  • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
  • மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து 45 முதல் 50 லாரிகளாக குறைந்துவிட்டது.

போரூர்:

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக பீன்ஸ், தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன்விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது வரத்து குறைவால் அதன் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரையிலும் வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் மொத்த விற்பனையில் கடந்த வாரம் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் விலை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து 45 முதல் 50 லாரிகளாக குறைந்துவிட்டது. இதேபோல் பீன்ஸ் வரத்தும் பாதியாக குறைந்து போனது. இதனால் தக்காளி, பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் இதே நிலைதான் இருக்கும் என்றார்.

Tags:    

Similar News