தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,994 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2024-07-02 04:08 GMT   |   Update On 2024-07-02 04:08 GMT
  • பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
  • 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இதேபோல் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7,994 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 66.14 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது. 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.67 அடியாக உயர்ந்து உள்ளது.

Tags:    

Similar News