தமிழ்நாடு

குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் ஆங்கில எழுத்துக்களில்தான் உள்ளன - உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

Published On 2024-07-04 07:12 GMT   |   Update On 2024-07-04 07:12 GMT
  • 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
  • குற்றவியல் சட்டங்கள் இந்தி, சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் (IPC) தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்தில் பெயரிட்டது அரசியலமைப்புக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

ராம்குமார் தாக்கல் செய்த அந்த மனுவில், "இந்தியாவில் உள்ள 56.37% மக்களுக்கு இந்தி தாய்மொழியாக இல்லை. ஆனால் முக்கியமான சட்டங்களுக்கு சமஸ்கிருதம், இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ள்ளது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களில் 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்தி அதிகாரபூர்வமான மொழியாக உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(1)(ஏ) பிரிவின்படி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இன்று, தற்காலிக தலைமை நீதிபதி ஆர் மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரியாத சட்ட மாணவர்கள், சட்ட ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த மனுவை தாக்கல் செய்ததாக மனுதாரர் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு இந்தி மொழி தெரியாத நிலையில், இந்தி மொழியில் சட்டங்களுக்கு பெயரிடுவது தமிழகத்தில் பல நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஆங்கிலத்தில்தான் நிறைவேற்றப்பட்டன, 'Bharatiya Nyaya Sanhita' என சட்டங்களின் பெயர்கள் கூட இந்தி, சமஸ்கிருதத்தில் இல்லாமல் ஆங்கில எழுத்துக்களில்தான் இடம் பெற்றுள்ளன என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், "மக்கள் இந்த பெயர்களுக்கு இறுதியாக பழகிவிடுவார்கள். ஆனால் இந்த பெயர்கள் எந்தவொரு அரசியலமைப்பு உரிமைகளையும் அல்லது குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறவில்லை" என்று தெரிவித்தார்.

விசாரணையின் முடிவில் 3 குற்றவியல் சட்டங்களுக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்தது. இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Tags:    

Similar News