தமிழ்நாடு
null

'God Sent' சர்ச்சை: கடவுள் யாரையும் அனுப்பமாட்டாரு - மோடியை 'மறைமுகமாக' சாடினாரா குஷ்பு?

Published On 2024-07-04 06:13 GMT   |   Update On 2024-07-04 06:25 GMT
  • கடவுளால் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
  • கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஹத்ராஸ் சம்பவம் தெடர்பாக குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

ஹத்ராஸ் பேரழிவிலிருந்து மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். கடவுளால் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். கடவுள் சக்தியை நம்புபவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஏமாற மாட்டார்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். உங்களின் ஒவ்வொரு சுவாச காற்றிலும் அதை உணர்கிறீர்கள்.

ஹத்ராஸ் பேரழிவு கடவுளால் அனுப்பப்பட்டது அல்ல. கொல்லப்பட்ட 121 பேரும் தங்கள் கர்மாவால் உயிரிழக்கவில்லை. குருட்டு நம்பிக்கையால் உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவிகள். இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

இதற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பார்க்கும் போதுதான் உண்மையாகவே 'கடவுளால் அனுப்பப்பட்டவர்' என்ற வாசகம் நியாயப்படுத்தப்படும்" என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இந்த பதிவின் கீழே ஹத்ராஸின் பேரழிவிலிருந்து மக்கள் விழித்துக் கொண்டு 'நான் பயாலஜிக்கல்' ( Non-Biological ) என்று யாரும் இல்லை என்பதை புரிந்து கொள்வார்கள் என்று பத்திரிகையாளர் முகமது சுபைர் மோடியை கிண்டலடித்துள்ளார். மேலும், பலரும் குஷ்புவின் பதிவின் கீழ் மோடியை கிண்டல் செய்து வருகின்றனர்.

மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியுள்ளார் என்று மோடி பேசிய நிலையில் கடவுளால் யாரும் அனுப்பட மாட்டார்கள் என்று குஷ்பு தெரிவித்துள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News