தமிழ்நாடு

புதிய சட்டம் நீதிமன்றத்திற்கும், மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும்- ப.சிதம்பரம்

Published On 2024-07-06 09:37 GMT   |   Update On 2024-07-06 09:37 GMT
  • பா.ஜ.க. அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. அந்த சட்டத்தின் வார்த்தை வாயில் வராது.
  • இந்தியை நுழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று பா.ஜ.க. செய்துள்ளது.

சென்னை:

மத்திய அரசு புதிய 3 குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அரசியலமைப்புக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. சட்டத் துறை சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இதற்காக பந்தல் போடப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வக்கீல்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. தி.மு.க. சட்டத்துறை நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிர மணியன், தயாநிதி மாறன் எம்.பி., சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை, சட்டத்துறை இணை செய லாளர் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டத்துறை இணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார்.

இந்த போராட்டத்தில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், மூத்த பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேயக் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி., தி.மு.க. சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் வழக்கறிஞர் இரா.கிரிராஜன் எம்.பி., மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜ.க. அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. அந்த சட்டத்தின் வார்த்தை வாயில் வராது. இதற்கு தான் ஆதியில் இருந்து இந்தியை நாம் எதிர்த்தோம். அதிகாரத்தில் இருக்கும் யாரும் தங்களை கேள்வி கேட்கக் கூடாது என பா.ஜ.க. நினைக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு இந்நேரம் இந்த சட்ட திருத்தங்களை குப்பை தொட்டியில் வீசி இருக்க வேண்டும்.

சர்வாதிகாரத்தின் தொனியை திணிப்பதுதான் இந்த 3 சட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சட்டங்களின் பெயரை நீதிமன்றங்களில் உச்சரிக்க வேண்டும்.

இந்தியை நுழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று பா.ஜ.க. செய்துள்ளது. இந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து நியாயமான கருத்து கூறியிருக்க வேண்டியவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. ஆரம்பத்திலேயே ஒன்றிய அரசின் போக்கை கிள்ளி எறிய வேண்டும். சட்டக்குழு இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

உண்ணாவிரதத்தில்முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதில் 90 முதல் 95 சதவீதம் வரை பழைய சட்ட திருத்தத்தை தான் கொண்டு வந்துள்ளார்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, காப்பி அடித்து உள்ளார்கள். இதை சொன்னால் மத்திய அரசு மறுக்கிறது. விவாத்திற்கு தயாராக இருக்கிறார்களா? இது பற்றி பட்டிமன்றமே நடத்தலாம். அதில் பழைய பிரிவு, புதிய பிரிவு குறித்து விவாதிக்கலாம்.

513 பிரிவுகளில் 46 பிரிவுகளில் கை வைத்து இருக்கிறார்கள். பொதுவாக திருத்தம் செய்ய வேண்டும் என்றால் திருத்தம் கொண்டு வரலாம். அதை போல் சட்டத்தை நீக்க வேண்டும் என்றால் நீக்கலாம். ஆனால் புதிய சட்டம் என்று கொண்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு 302 கொலை குற்றம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அதை 203-க்கு மாற்றி இருக்கிறார்கள். அதனால் என்னவாகும் என்றால் சட்டத்தில் குழப்பம் வரும். எல்லாரும் மீண்டும் சட்டத்தை படிக்க வேண்டியது வரும். நீதித்துறையில் குழப்பம் ஏற்படும். முதலில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் சட்ட கமிஷனுக்கு அனுப்பியிருக்க வேண்டும். பாராளுமன்ற நிலைக் குழுவில் எல்லாரும் விவாதித்து இருக்க வேண்டும்.

ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் வெளியேற்றி விட்டு நிறைவேற்றிருக்கிறார்கள். சட்ட கமிஷனிடம் ஆலோசனை நடத்தாதது தவறு. 3 சட்டப்பிரிவுகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றால், இது மோசமான அரசு தானே. தற்போது வந்துள்ள சட்டத்தால் ஜாமின் பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு 100 ஜாமின் மனுக்கள் வருகிறது. அங்கு போய் எல்லாரும் ஜாமின் வாங்க முடியாது. ஜாமின் கிடைப்பது என்பது சிறிய குற்றத்துக்கு 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். அதை போல போலீஸ் காவல் முறையிலும் அவர்கள் சட்டத்தால் குழப்பம் ஏற்படும்.

ஒவ்வொரு மாநிலங்களும் புதிய சட்டங்களை எதிர்த்து சட்டசபைகளில் தீர்மானம் கொண்டு வரலாம். அதில் எதை மத்திய அரசு எடுக்கும் என்று சொல்ல முடியாது. மாநிலங்களுக்கு சட்டங்களில் திருத்தம் கொண்டுவர அதிகாரம் உண்டு. ஆனால் மத்திய அரசு அதை ஏற்காது. இந்த சட்டத்தால் மக்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். எனவே, இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து சட்ட கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இறுதியாக தி.மு.க. துணைப் பொதுச்செய லாளர் ஆ.ராசா எம்.பி, நிறைவுரையாற்றுகிறார்.

Tags:    

Similar News