குன்னூரில் கதவை தட்டி உணவு கேட்கும் காட்டெருமை
- நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- காட்டெருமை உணவு தேடி வீட்டின் கதவுகளை வந்து தட்டுகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிந்து வருகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சர்வசாதராணமாக நடமாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே உள்ளனர்.
இந்த நிலையில் காட்டெருமை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி உணவு தேடி குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பகுதிக்கு வந்தது. குடியிருப்பு பகுதிக்குள் சென்ற காட்டெருமை அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சென்றது.
வீட்டின் அருகே சென்றதும், காட்டெருமை வீட்டின் கதவை தட்டியது. வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது வாசலில் காட்டெருமை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.
இருப்பினும் காட்டெருமைக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். சில நிமிடங்களில் காட்டெருமை அங்கிருந்து சென்று விட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
கடந்த சில நாட்களாக இங்கு ஒரு காட்டெருமை சுற்றி திரிகிறது. சில நேரங்களில் அந்த காட்டெருமை உணவு தேடி வீட்டின் கதவுகளை வந்து தட்டுகின்றன. உணவு கொடுத்தால் அதனை சாப்பிட்டு விட்டு சென்று விடுகின்றன.
இது சாதாரணமாக தெரிந்தாலும், சில நேரங்களில் காட்டெருமையின் தாக்குதலுக்கு ஆளாகலாம். எனவே அந்த காட்டெருமையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.