தமிழ்நாடு

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

பெண்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்து 3 பேர் பலி- பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

Published On 2024-06-23 05:05 GMT   |   Update On 2024-06-23 05:33 GMT
  • விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் தாசில்தார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாலு மாவடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பெங்களூக்கு சென்று செல்போன் கடைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்கி விட்டு இன்று தூத்துக்குடி வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது முக்காணி பகுதியில் சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் மணிகண்டன் ஓட்டி வந்த கார் புகுந்தது.

இதில் அதே பகுதியை சேர்ந்த பலவேசம் என்பவரது மனைவி நட்டார் சாந்தி (வயது45), ராஜ்குமார் என்பவரின் மனைவி பார்வதி (40), சித்திரவேல் என்பவரது மனைவி அமராவதி (59) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சுந்தரம் என்பவரது மனைவி சண்முகத்தாய் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கார் டிரைவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் தாசில்தார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் எப்போதுமே வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

சாலையின் இருபுறமும் தெருக்கள் உள்ளன. எனவே நாங்கள் அடிக்கடி சாலையை கடக்கும் போது அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் தெருவிளக்குகள் இரவு முழுவதும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் 4 இடங்களில் பேரிகார்டுகள் அமைத்து வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் இன்று இரவுக்குள் வேகத்தடை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த விபத்தில் பலியான பார்வதியின் கணவர் ராஜ்குமார் கட்டிட தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ்-1 வகுப்பும், மகன் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் தெருவோரம் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த 3 பெண்கள் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News