தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2024-01-05 09:23 GMT   |   Update On 2024-01-05 09:23 GMT
  • சம்பவம் நடந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
  • சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், துப்பாக்கிச் சூட்டில் பலியான இளம்பெண்ணின் தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.

ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம்பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா சென்னை ஐகோர்ட்டில், பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று 5 ஆண்டுகளாக காத்திருந்தேன்.

இந்த நிலையில், சட்ட விதிகளுக்கு முரணாக அரசு, எந்திரத்தனமாக செயல்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

சம்பவம் நடந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழக அரசு 2022 அக்டோபர் மாதம் பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்; அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர் வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை பிப்ரவரி 21-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

Tags:    

Similar News