தமிழ்நாடு

ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கு: சாட்சியங்களிடம் விசாரணையை தொடங்கிய சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள்

Published On 2024-05-29 04:59 GMT   |   Update On 2024-05-29 04:59 GMT
  • இதுவரை சம்பவம் நடந்த தோட்டம், ஜெயக்குமார் வீடு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
  • சிலரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் தனசிங் (வயது 60).

இவர் கடந்த 4-ந்தேதி அவரது வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை சம்பவம் நடந்த தோட்டம், ஜெயக்குமார் வீடு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சாட்சியங்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே சிலரிடம் விசாரித்து இருந்தாலும், அவர்கள் நெல்லை மாவட்ட போலீசார் விசாரித்தபோது கூறிய தகவல்களும், தற்போது சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கூறிய தகவல்களும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் மீண்டும் அந்த நபர்களிடம் விசாரணையை நடத்துகின்றனர்.

மேலும் பல்வேறு சாட்சியங்களிடமும் இன்று நேரில் திசையன்விளைக்கு சென்றும், சிலரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

மேலும் கரைசுத்து புதூரில் ஜெயக்குமார் உடலை முதலில் பார்த்த தோட்ட தொழிலாளி, அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள், அவரது கார் டிரைவர், இறப்பதற்கு முன்பாக கடைசி 3 நாட்கள் அதிக நேரம் அவருடன் இருந்தவர்கள், அந்த நாட்களில் ஜெயக்குமார் தனது செல்போனில் அதிக நேரம் பேசியவர்களிடமும் இன்று விசாரணை நடத்தி அதனை பதிவு செய்து கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News