null
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்- வைகோ
- பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது.
- மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மலை பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது. பத்தாயிரம் ராணுவ வீரர்களைக் குவித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து, பொது அமைதி கெட்டு கடந்த 22 நாட்களாக சின்னஞ் சிறிய மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது..
ரஷ்யா-உக்ரைன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டாண்மை செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது. அசாம் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதியை உருவாக்க முயற்சிக்காதது ஏன்?
உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த மணிப்பூர், சில ஆண்டுகளுக்கு முன்பு அமைதி வழிக்குத் திரும்பி, வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தற்போது மீண்டும் அமைதி சீர்குலைக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.