தமிழ்நாடு

சென்னை வெள்ள தடுப்பு திட்டத்துக்கு முதல் தவணையாக மத்திய அரசு ரூ.150 கோடி ஒதுக்கீடு

Published On 2024-08-01 06:49 GMT   |   Update On 2024-08-01 06:49 GMT
  • சில பணிகள் தொடங்கப்பட்டு வடகிழக்கு பருவமழைக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கொரட்டூர் உபரி வாய்க்காலின் திறனை அதிகரிக்கவும், புத்தகரம் உள்ளிட்ட சிறு நீர்நிலைகளை புதுப்பிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

கடந்த ஆண்டு வெள்ளத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் முதல் நகர்ப்புற வெள்ளத்தணிப்புத் திட்டத்தில் ரூ.561.29 கோடி சென்னைக்கு ஒதுக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் ரூ.500 கோடியும் அடங்கும்.

இந்த நிலையில் சென்னை வெள்ள தடுப்பு திட்டத்துக்கு முதல் தவணையாக ரூ.150 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் மாநில அரசுக்கு முதல் தவணையாக இந்த மானியம் வழங்கப்படும்.

சிறு நீர்நிலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள சில உபரி வாய்க்கால்களை மேம்படுத்துதல், புதிய மழைநீர் வடிகால்களை நிர்மாணித்தல், கடற்பாசி பூங்காக்கள் மேம்பாடு, எட்டு நீர்நிலைகளை புத்துயிர் பெறுதல் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நீர் வளத்துறை அதிகாரிகள் கூறும் போது,

சில பணிகள் தொடங்கப்பட்டு வடகிழக்கு பருவமழைக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரு.வி.க.நகர், கொளத்தூர், கெருகம்பாக்கம் வாய்க்காலில் வெள்ளத்தை குறைக்கும் வகையில் தணிகாசலம் வடிகால் கொள்ளவு மேம்படுத்தப்படுகிறது. மணப்பாக்கம் , நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கை குறைக்கும் பணி நடந்து வருகிறது. கொரட்டூர் உபரி வாய்க்காலின் திறனை அதிகரிக்கவும், புத்தகரம் உள்ளிட்ட சிறு நீர்நிலைகளை புதுப்பிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. மணலி, சாத்தங்காடு, மாதவரம் போன்ற பகுதிகளில் உள்ள 8 நீர்நிலைகளும் வெள்ளத்தைத் தணிக்க புதுப்பிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News