தொழில்நுட்ப கோளாறு: சென்னை-லண்டன் விமானம் ஒரு வாரம் நிறுத்தம்
- சென்னை-லண்டன் தினசரி விமானத்தில், பயணிகள் அதிகமாக பயணம் மேற்கொண்டு வந்தனர்.
- பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், நேரடி விமான சேவையை தினமும் இயக்கி வருகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 3.15 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும்.
சென்னை-லண்டன் இடையே நேரடி விமான சேவை என்பதாலும், மேலும் லண்டன் சென்று அங்கு இருந்து ஸ்காட்லாந்து, பிரேசல்ஸ், ரோம், பாரிஸ், நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் இருப்பதாலும், சென்னை-லண்டன் தினசரி விமானத்தில், பயணிகள் அதிகமாக பயணம் மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை. இதனால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமான பயணிகள் தற்போது துபாய், கத்தார், அபுதாபி, பிராங்க்பார்ட் வழியாக லண்டன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.