சுரங்கப்பாதைகள் மூடல்.. கடும் போக்குவரத்து நெரிசல்.. கனமழையில் சிக்கித் திணறும் சென்னை
- 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
- மழைநீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 29) மாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை காலை வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் மொத்தமாக உள்ள 20 சுரங்கப்பாதைகளில் 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
மழைநீர் தேக்கம் காரணமாக பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மேலும் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது.
சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை கிண்டி, வடபழனி, போரூர், தாம்ரம், சைதாப்பேட்டை செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.