சென்னை போலீசில் 'டிரோன்' சிறப்பு படை- சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்
- டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார்.
- மெரினா கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை டிரோன் மூலம் வழங்கி உதவ முடியும்.
சென்னை:
சென்னை போலீசில் புதிதாக டிரோன் சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் இதற்காக தனி பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின் பேரில் இந்த டிரோன் பிரிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தொழில், சட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படும் 9 டிரோன்கள் இந்த பிரிவில் பயன்படுத்தப்பட உள்ளன. 3 விதமான பயன்பாட்டில் இவை இருக்கும்.
மெரினா கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை டிரோன் மூலம் வழங்கி உதவ முடியும். அவசர காலத்தில் குற்றவாளிகளை பிடிப்பதற்கும், தொலை தூரங்களில் உள்ள இடங்களுக்கு சென்று பயன்படும் வகையிலும் டிரோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் உள்ள பட்டதாரிகள் என்ஜினீயர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இந்த பிரிவில் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த டிரோன் பிரிவு போலீசுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.
நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்ட டிரோன் பிரிவு தொடக்க விழாவில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா, லோகநாதன், இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி, துணை கமிஷனர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.