சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி வழங்குகிறார்
- சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை செயல்படுத்தி வருகிறது.
சென்னை:
சுதந்திர தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் அரசு துறைகள், பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை செயல்படுத்தி வருகிறது.
இந்த பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை வழங்குகிறார். கமிஷனர் சங்கர் ஜிவால் விருதை பெற்றுக்கொள்கிறார்.
இதே போன்று வேளாண் எந்திர வாடகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக வேளாண் துறைக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது.
பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.