தமிழ்நாடு

எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-10-17 07:35 GMT   |   Update On 2024-10-17 09:34 GMT
  • கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
  • மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மக்களின் பாராட்டுகள் வருகின்றன.

சென்னை:

சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நிவாரண பணிகளை வேகப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி சென்னை நகரின் பல பகுதிகளுக்கும் சென்று அவர் ஆய்வு நடத்தினார். நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கிண்டி ரேஸ் கிளப் பகுதி, வேளச்சேரி ஆறுகண் கல்வெட்டு வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொளத்தூர் வீனஸ் நகர் 200 அடி சாலை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெட்டேரியில் நிரம்பிய தண்ணீரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு அவருக்கு அதிகாரிகள் தண்ணீர் வரத்து மற்றும் கரைகளை பலப்படுத்தியது பற்றியும் விளக்கி கூறினார்கள்.

இதன் பிறகு பாலாஜி நகருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்காலிக மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் தணிகாசலம் நகர் கால்வாயை பார்வையிட்டார். அதன் பிறகு கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மை பணியாளர்கள் மற்றும் முன் 'கள' பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அங்கிருந்து ஜி.கே.எம்.காலனி ஜம்புலிங்கம் ரோட்டில் உள்ள கனரா வங்கி அருகில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்ட பிறகு கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கே: சென்னையில் மழைநீர் முழுமையாக வடிந்து விட்டதா?

ப: எங்களுக்கு தெரிந்த வரை ஆல் மோஸ்ட் எல்லாம் வடிந்துவிட்டது. எங்களுக்கு தெரியாமல் சில இடங்களில் இருந்தால் கூட அதையும் உரிய கவனம் செலுத்தி வடிய வைக்க முயற்சி செய்வோம்.

கே: மழையின்போது பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பணி எவ்வாறு இருந்தது?

ப: ரொம்ப சிறப்பாக மிகவும் பெருமைப்படக் கூடிய அளவுக்கு மக்கள் பாராட்டும் அளவுக்கு பணிகள் இருந்தது. அதற்காக மாநகராட்சி அதிகாரிகளை மட்டுமல்ல ஊழியர்களுக்கு, துப்புரவு பணியாளர்களுக்கு மற்ற துறைகளின் அதிகாரிகளுக்கு எல்லோருக்கும் நான் நன்றி தெரிவித்து உள்ளேன். வாழ்த்து கூறி உள்ளேன்.

கே: சமூக வலைதளங்களில் நிறைய பாராட்டுகள் வருவது பற்றி உங்கள் கருத்து?

ப: பாராட்டுகளும் வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க. அரசை பாராட்டுவதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் சிலர் விமர்சனமும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி. அந்தப் பணியைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

கே: அரசின் முழு திறமையையை பயன்படுத்துகிற அளவுக்கு மழை இருந்ததா?

ப: நிச்சயமாக இருந்தது. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எந்த பிரச்சனையும் கிடையாது. ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். சிலர் இதை அரசியலாக்க முயற்சி செய்கிறார்களே தவிர எவ்வளவு வேலை நடந்துள்ளது, என்ன பணிகள் நடந்திருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். அவங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால் இதை அரசியலாக்கி அதை ஒரு வியாபார பொருளாக்க சிலர் நினைக்கிறார்கள். நான் அதை விரும்பவில்லை.

கே: வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 2 மாதம் இருக்கிறதே? இந்த மழைக்கே...?

ப: எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். தொடர்ந்து நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

கே: மழை அளவு குறைவாக இருந்ததால்தான் பாதிப்பு குறைவாக இருந்ததாக சொல்கிறார்கள்.

ப: அது வந்து மக்களுக்கு தெரியும். அவங்களுக்கு தெரிகிறேதா இல்லையோ மக்களுக்கு தெரியும் விடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு மற்றும் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

Tags:    

Similar News