தமிழ்நாடு

2 நாள் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-05-22 03:15 GMT   |   Update On 2023-05-22 03:15 GMT
  • தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் செல்கிறார்.
  • சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில் துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

பதவி ஏற்ற உடனேயே அவர், 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்து இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு துபாய், அபுதாபி நாடுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றது.

அப்போது 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 207 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இதில், 111 தொழில் நிறுவனங்கள் இதுவரை தொடங்கப்பட்டு, ரூ.13 ஆயிரத்து 726 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 15 ஆயிரத்து 529 பேருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த இருக்கிறது. இதில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) தொழில் துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர் செல்ல இருக்கிறார். அங்கு 24-ந்தேதி (நாளை மறுநாள்) நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த மாநாட்டில், சிங்கப்பூர் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். முன்னதாக, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அவர் முன்னேற்பாடுகளை செய்ய இருக்கிறார்.

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க இருக்கிறார்.

Tags:    

Similar News