பொங்கல் பரிசு நாளை முதல் கிடைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
- டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ரேசன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பரிசை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை கார்டு பொருள் இல்லா கார்டுகளை வைத்திருப்பவர்களை தவிர்த்து அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 7-ந்தேதி முதல் இன்று வரை தகுதியான அனைவருக்கும் டோக்கன் வழங்கி முடிக்கப்பட்டு உள்ளது. ரேசன் கடை ஊழியர்கள் இன்றும் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கினார்கள்.
கடந்த 3 நாட்களாக வழங்கப்பட்ட டோக்கனில் எந்தெந்த தேதியில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் நாளை முதல் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக வருகிற 14-ந்தேதி வரை பொங்கல் தொகுப்பை ரேசன் கடைகளில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பை வழங்கும்போது பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரேசன் கடைகளில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2.24 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன.
இதில் 4 லட்சம் சர்க்கரை கார்டுகள் உள்பட வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் என 24 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் கிடைக்காது. மற்ற அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இதன்படி 1.86 கோடி ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2,067 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில் முதல் கட்டமாக ரூ.239 கோடி கடந்த 4-ந்தேதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1828 கோடி ரூபாய் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை காலை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ரேசன் கடையில் அவர் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பரிசை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
இதன் பிறகு அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட உள்ளது.