தமிழ்நாடு

சென்னைக்கு வெளியூர்களில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

Published On 2024-05-30 05:14 GMT   |   Update On 2024-05-30 05:14 GMT
  • 4, 5-ந்தேதிகளில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் ஜூன் மாதம் தொடக்கத்தில் வருகின்றன.

சென்னை:

தமிழகம் முழுவதும் ஜூன் 6-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படுவதால் வெளியூர்களுக்கு சென்ற மாணவர்கள் பெற்றோர்களுடன் சென்னை திரும்பி வருகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

கூலி வேலை, வியாபாரம், அலுவலக பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் கோடை விடுமுறையில் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விட்டு விட்டு தங்கள் பணியை தொடர்ந்து செய்து வரும் அவர்கள் பள்ளிக்கூடம் திறக்கப்படுவதால் குழந்தைகளை அழைத்து வருகின்றனர்.

இந்த வாரம் இறுதிக்குள் பெரும்பாலானவர்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு திரும்பி விடுவார்கள் என்றாலும் சிலர் அடுத்த வாரம் பயணத்தை தொடங்கலாம். 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

எனவே 4, 5-ந்தேதிகளில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் ஜூன் மாதம் தொடக்கத்தில் வருகின்றன. அதனால் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

அடுத்த வாரம் தேர்தல் முடிவு வருவதால் 4-ந்தேதி மாலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் 5-ந் தேதி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜூன் 15-ந்தேதி வரை முகூர்த்த நாட்கள் வருவதால் தேவைக்கேற்ப பஸ் வசதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News