டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க நடவடிக்கை: 1,000 இடங்களில் நாளை முதல் காய்ச்சல் முகாம்
- பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும்.
சென்னை:
அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1-ந்தேதி முதல் (நாளை) ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.
குறிப்பாக, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இந்த காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக டெங்கு பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவுவிட்டுள்ளது.
அதன்படி, டெங்கு பாதிப்பை கண்காணிக்க 2 இணை இயக்குனர்களும், 7 கூடுதல் இயக்குனர்கள் என மொத்தம் 9 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 45 சுகாதார மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிக்கும் 4 முதல் 5 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.