தமிழ்நாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் அனுமதி- சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Published On 2024-08-01 04:35 GMT   |   Update On 2024-08-01 04:35 GMT
  • மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
  • மலையடிவாரத்திலும் கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு அகஸ்தியர் உட்பட 18 சித்தர்களும் வாழ்ந்து வழிபட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக லிங்கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

வருகிற 4-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (1-ந்தேதி) முதல் வருகிற 5-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆடி பிரதோஷமான இன்று சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய நேற்று இரவு முதல் விருதுநகர், மதுரை, நெல்லை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான பஸ், வேன், கார்களில் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் நேற்று இரவு மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் தங்கினார்.

இன்று அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறுவதற்காக தாணிப்பாறை கேட் முன்பு கூடினர். காலை 5.30 மணி அளவில் பக்தர்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பக்தி கோஷமிட்டு ஆர்வத்துடன் மலை ஏறினர். சுமார் 3 மணி நேரம் மலையேறி சுந்தர சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

மலைப்பாதைகளில் வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் சண்முகநாதன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மலையடிவாரத்திலும் கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆடி அமாவாசை முன்னிட்டு முதல் நாளான இன்று வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்னும் 4 நாட்கள் இருப்பதால் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News