தமிழ்நாடு (Tamil Nadu)

ஆனிமாத பவுர்ணமியொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

Published On 2024-06-21 07:43 GMT   |   Update On 2024-06-21 07:43 GMT
  • கிரிவல பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
  • இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேங்கிக்கால்:

திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையை வலம் வந்து வழிபட்டனர்.

ஆனி மாத பவுர்ணமி இன்று வெள்ளிக்கிழமை காலை 7.46 மணிக்கு தொடங்கி நாளை சனிக்கிழமை காலை 7.21 மணிக்கு நிறைவு பெறுகிறது.

பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வழிபட்டனர்.

கிரிவல பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் இன்று காலை முதல் பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி விட்டன. அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் தாகம் தணிக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தையுடன் வந்த பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படி தனி வழி அமைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சாமி தரிசனம் செய்த அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News