பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் தகராறு- 2 மீனவ கிராமமக்கள் மீண்டும் மோதல்
- கடலில் பயன்படுத்தும் வலையை பழவேற்காடு ஏரியில் பயன்படுத்தக் கூடாது.
- இரு தரப்பினரும் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பொன்னேரி:
பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்களுக்கும், நடுவூர் மாதா குப்பம், ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம் மீனவர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது.
கடலில் மீன் பிடிக்கும் கூனங்குப்பம் மீனவர்கள் ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்பட வில்லை.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடலில் பயன்படுத்தும் வலையை பழவேற்காடு ஏரியில் பயன்படுத்தக் கூடாது எனவும், பாரம்பரிய ஒதுக்கீடு பகுதியில் மட்டுமே மீன்பிடிக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார். இதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இருதரப்பு மீனவர்களிடையேயும் இன்னும் சுமூகமான முடிவு வர வில்லை.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழவேற்காடு ஏரியில் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, கூனங்குப்பம் மீனவர்களும் அங்கு மீன்பிடித்ததாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதுகுறித்து இரு தரப்பினரும் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே பழவேற்காடு ஏரியில் கோட்டைக்குப்பம் மீனவர்கள் நேற்று மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஏரியின் ஓரக்கரைபாடு எனப்படும் இடத்தில் கூனங்குப்பம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் அந்த பகுதியை தாண்டி வலையை வீசியதாக கூறி கோட்டைக்குப்பம் மீனவர்களுக்கும், கூனங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் அங்கு வந்தனர். அவர்களுக்கும் கூனங்குப்பம் மீனவர்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் நடுவூர் மாதா குப்பத்தை சேர்ந்த ராபர்ட், சந்தியாகிராஜ், சகாயராஜ், மார்டீன், ஆரோக்கியராஜ், பாலு, சாலமன் ஆகிய 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் 5 பேர்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதட்ட மானநிலை ஏற்பட்டு உள்ளது. பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மோதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி நேற்று இரவு கோட்டைக்குப்பம், நடுவூர்மாதா குப்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பழவேற்காடு பஸ்நிலையம் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க பழவேற்காட்டில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.