தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளி விற்பனை களை கட்டியது: கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்

Published On 2023-11-05 06:26 GMT   |   Update On 2023-11-05 06:26 GMT
  • ரங்கநாதன் தெரு முழுக்கவே பொதுமக்கள் தலைகளாகவே தெரிந்தன.
  • சுமார் 1000 போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் பொதுமக்கள் ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கி வருகிறார்கள். இதனால் சென்னையில் கடை வீதிகள் களை கட்ட தொடங்கியுள்ளன.

சென்னையில் நேற்று ஏராளமான பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள்.

இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜவுளி, நகைகள் மற்றும் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர். கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் வெயில் அடித்ததால் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்களுக்கு வசதியாக அமைந்தது.

இதனால் இன்று காலையில் இருந்தே சென்னையில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல கடைகளுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அனைத்து கடைகளிலுமே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னையின் முக்கிய வணிக மையமாக விளங்கும் தி.நகரில் இன்று காலையில் இருந்தே ஏராளமான மக்கள் குவிந்து தீபாவளி கொண்டாடுவதற்கு தேவையான ஜவுளி, நகைகள் போன்றவற்றை ஆர்வமாக வாங்கினார்கள். தி.நகர் ரங்கநாதன் தெருவில் இன்று கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

ரங்கநாதன் தெரு முழுக்கவே பொதுமக்கள் தலைகளாகவே தெரிந்தன. நடக்கக்கூட இடம் இல்லாத வகையில் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அதே போல் கடைகளுக்கு உள்ளேயும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கடைகளிலும் விற்பனை அமோகமாக நடந்தது.

இதேபோல் தி.நகர் உஸ்மான் சாலையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. உஸ்மான் சாலையில் உள்ள கடைகள், தெருவோர கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கினார்கள்.


கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நின்றபடியும் போலீசார் கூட்ட நெரிசலில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று கண்காணித்தனர்.

அந்த பகுதியில் சுமார் 1000 போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏராளமான ஆண் போலீசாரும், பெண் போலீசாரும் சாதாரண உடையிலும் கண்காணித்தனர். பெண் போலீசார் சேலை மற்றும் சுடிதார் அணிந்து கொண்டு பொருட்கள் வாங்க செல்வது போல் கூட்டத்துடன் கூட்டமாக நின்று கொண்டு பெண்களிடம் யாராவது அத்துமீறலில் ஈடுபடுகிறார்களா என்றும் காண்காணித்தனர்.

தி.நகர் ரங்கநாதன் தெருவில் வழக்கமாக கண்காணிப்பு பணிக்காக 50 நிரந்தர சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தற்போது கூடுதலாக மேலும் 50 சி.சி.டி.வி கேமராக்கள் நேற்று முதல் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்தே போலீசார் கண்காணித்தனர்.

தி.நகர் பகுதிகளில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களும் ஒட்டப்பட்டு உள்ளன. அது போன்றவர்களை பார்த்தால் மிகவும் உஷாராக இருக்கும்படி போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் இது போன்ற பழைய குற்றவாளிகள் தீபாவளி கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களின் முக அடையாளங்களை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி கொண்ட நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி இனிவரும் நாட்களிலும் சனிக்கிழமை வரை மாலை நேரங்களில் அதிக அளவில் கூட்டம் வரும் என்பதால் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இன்னும் 2 நாட்களில் தி.நகர் ரங்கநாதன் தெரு பகுதியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்படுகிறது.

பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணம், அணிந்திருக்கும் நகைகள் மற்றும் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துக்கொண்டே இருந்தனர். மேலும் முன்பின் தெரியாதவர்கள் வந்து பேசினால் அவர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம் என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினார்கள்.

இதேபோல் தி.நகர் பாண்டி பஜார், பனகல் பார்க், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர் பஸ் நிலையம், ஜி.என்.செட்டி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள்.

சென்னை புரசைவாக்கத்தில் ஏராளமான ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளன. இங்கும் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்களை வாங்கினார்கள். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் வாகனங்கள் செல்லக்கூட இடம் இல்லாத வகையில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்பட்டது.

ஜவுளிகளின் மையமாக திகழும் வண்ணாரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் ஜவுளிக்கடைகள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் இங்கு குவிந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தேவையான ஜவுளிகளை வாங்கினார்கள்.

சென்னை, புறநகர் பகுதிகள், மீஞ்சூர், பொன்னேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வண்ணாரப்பேட்டைக்கு வந்து ஆடைகளை வாங்கினார்கள். புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி போலீசார் எச்சரித்துக்கொண்டே இருந்தனர்.

சென்னை குரோம்பேட்டை தற்போது வணிக மையமாகவே மாறியுள்ளது. இங்கு பிரபல நிறுவனங்களின் ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் ஏராளம் உள்ளன. இதனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று இங்கும் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து தீபாவளி பண்டிகைக்கான ஆடைகள், நகைகள் மற்றும் பொருட்களை வாங்கினார்கள். குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கூட ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து குவிந்தனர். இதனால் குரோம்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் இன்று வியாபாரம் களை கட்டியது. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

இதேபோல் சென்னை பாரிமுனை, தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், பாடி, மயிலாப்பூர், அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட அனைத்து வணிக பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொதுமக்கள் குவிந்து ஜவுளி, நகைகள், அணிகலன்கள், செல்போன்கள், டி.வி. மற்றும் வீடுகளுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றை வாங்கினார்கள்.

இதேபோல் கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள கடைகளிலும் தீபாவளி ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கடை வீதிகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News