மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்... ஆவடியில் பிரேமலதா பங்கேற்றார்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது.
- தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை:
மின் கட்டண உயர்வு, ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது ஆகியவற்றை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின் கட்டண உயர்வும், மின் வெட்டும் வழக்கமாகி விடுகிறது. ரேசன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் சரியான முறையில் கிடைப்பது இல்லை. மாதம் தோறும் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக கூறிவிட்டு ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக தே.மு.தி.க. இதுபோன்ற போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவோம்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், சூரியா, பிரபாகரன், மாறன், செந்தில் குமார், பழனி, வேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் செழியன், மகாதேவன் மற்றும் தே.மு.தி.க.வினர் கலந்து கொண்டனர்.
கோவையில், துணை செயலாளர் பார்த்தசாரதி, தர்மபுரியில் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.