நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
- பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
- தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நாமக்கல், ஈரோடு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் நாமக்கல் மற்றும் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களிடம் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
மேலும் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.
முன்னதாக, நேற்று கோவை, சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.