தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்- அமைச்சர் பேச்சு
- தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும்.
- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, டாக்டர் பொன் கவுதமசிகாமணி எம்.பி., மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., விழுப்புரம் எம்.எல் .ஏ. டாக்டர் லட்சுமணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும். 10 ஆண்டுகளில் பா.ஜனதா எதையும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகளில் சொன்னதை செய்த முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர மோடி நினைத்து செயல்பட்டு வருகிறார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார். அதன் பிறகும் கவர்னர் பதவி பிரமாணம் செய்யவில்லை. உச்சநீதி மன்ற நீதிபதி பதவிபிரமாணம் செய்யவில்லை என்றால் கவர்னர் மீது நடவடிக்கை எடுப்பேன் என கூறியதை தொடர்ந்து தான் எனக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமலாக்கதுறையை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சரையே கைது செய்துள்ளவர்கள் தான் பா.ஜனதா அரசு. அமலாக்க துறையை அனுப்பி தான் பா.ஜ.க.விற்கு 2500 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு பொன்முடி பேசினார்.