திருப்பத்தூரில் 16-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- விளையாட்டு மைதானத்தில் இருந்த பள்ளத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்த மாணவிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும்.
- ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி, சிக்கனாங்குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் இருந்த பள்ளத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்த மாணவிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கவும்; பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும்; ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இருந்த தேக்கு மரங்களை சட்ட விரோதமாக வெட்டிக் கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தி.மு.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அ.தி.மு.க. திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பில், 16-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர், கே.சி.வீரமணி தலைமையில் ஒன்றியக் செயலாளர்கள், ஜி.செந்தில்குமார், கோவி.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.