அ.தி.மு.க. சார்பில் 22-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, டாக்டர் விஜயபாஸ்கர், ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சியில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 26 ஊராட்சிகளும், அதேபோல் மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல ஊராட்சிகளையும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமலும், பொதுமக்களை பாதிக்கும் வகையிலும், திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன.
ஊராட்சிகள் மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டால், மத்திய அரசில் இருந்து இவ்வசதிகள் தங்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என மக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களை பாதிக்கும் வகையில் திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி மாநகர் ஆகிய மாவட்ட அ.தி.மு.க.சார்பில், 22-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், ஸ்ரீரங்கம் தொகுதி, அல்லித்துறை அண்ணா திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, டாக்டர் விஜயபாஸ்கர், ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.