இலங்கை தமிழர்கள் 3 பேரையும் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்ப வேண்டும்- அரசுக்கு எடப்பாடி கோரிக்கை
- மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
- இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக சிறையில் 32 ஆண்டு கால நீண்ட சிறை வாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் ஆகியோர் 11.11.2022 அன்று சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உடல்நலக் குறைவால் மரணமடைந்து உள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்தவர்கள், விடுதலைக் காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று பெருமூச்சு விடும்பொழுது, மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே கூட, எந்த நாட்டிற்கு செல்லப்போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபொழுது, அவர்கள் இலங்கை சென்றால் ஆபத்து மற்றும் தங்களுக்கு அங்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்றும், அதனால் வெளிநாடுகளில் வாழும் தங்களுடைய குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயாஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், தி.மு.க. அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.