தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க.வில் 2 கோடி பேரை சேர்க்க இலக்கு- எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2023-04-05 07:26 GMT   |   Update On 2023-04-05 07:26 GMT
  • அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்காக தனியாக விண்ணப்ப படிவம் அச்சிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10 ஆகும். ஒரு படிவத்தில் 5 உறுப்பினர்களை சேர்க்கலாம்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ள நிலையில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. சந்திக்க உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றால்தான் எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை நிரூபிக்க முடியும்.

எனவே கட்சியை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். கட்சியில் புதிதாக அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கவும் அவர் திட்டம் வகுத்துள்ளார்.

அதன்படி அ.தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கியது. அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.வில் தற்போது ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். புதிதாக 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மொத்தம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்காக தனியாக விண்ணப்ப படிவம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10 ஆகும். ஒரு படிவத்தில் 5 உறுப்பினர்களை சேர்க்கலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில் பெயர், வயது, பிறந்த தேதி, படிப்பு, வேலை, முகவரி உள்ளிட்ட எல்லா விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை இன்று மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். இதே போல் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை புதுப்பித்து வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News