தேர்தல் வழக்கு: மதுரை கோர்ட்டில் மு.க.அழகிரி ஆஜர்
- பறக்கும் படையினர் சோதனை செய்தபோது தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- மு.க.அழகிரியுடன் முன்னாள் மண்டல தலைவர் ஆர்.எம்.பி. சின்னான், எம்.எல்ராஜ், கோபிநாதன், உதயகுமார், முபாரக் மந்திரி மற்றும் பலர் உடன் வந்தனர்.
மதுரை:
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மதுரை மேலூரில் உள்ள வல்லடியார் கோவிலில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது பறக்கும் படையினர் சோதனை செய்தபோது தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், ரகுபதி, திரு ஞானம், ஒத்தப்பட்டி செந்தில், பொன்னம்பலம், தமிழரசன், நீதி தேவன், சேகர், மயில்வாகனன், ராகவன், ராமலிங்கம், சோலை நாகராஜ், வெள்ளையன், பாலகிருஷ்ணன், அய்யனார், கருப்பணன், பாலு, போஸ் உள்பட 20 பேர் ஆஜரானார்கள்.
இதில் திருஞானம் இறந்து விட்டதால் மற்ற அனைவரும் நீதிபதி நீலா பானு முன்பு ஆஜரானார்கள். இவர்கள் மீண்டும் வருகிற ஜனவரி 6-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரியிடம் நிருபர்கள் பேட்டி கேட்க முயன்றபோது கருத்து சொல்ல மறுத்து விட்டார். இருந்தபோதிலும் நீதிமன்ற செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்று மட்டும் தெரிவித்துவிட்டு சென்றார்.
மு.க.அழகிரியுடன் முன்னாள் மண்டல தலைவர் ஆர்.எம்.பி. சின்னான், எம்.எல்ராஜ், கோபிநாதன், உதயகுமார், முபாரக் மந்திரி மற்றும் பலர் உடன் வந்தனர்.