தமிழ்நாடு

22-வது பிறந்தநாளை கொண்டாடிய திருவானைக்காவல் கோவில் யானை

Published On 2024-05-24 06:45 GMT   |   Update On 2024-05-24 06:45 GMT
  • 9 1/2 வயதில் திருச்சி திருவானைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
  • அகிலாவை கவனித்து வரும் கோவில் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வருடமும் அதன் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

திருச்சி:

பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக் கோவில் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அசாம் மாநிலத்திலிருந்து பெண் யானை கொண்டு வரப்பட்டது.

அதற்கு இந்த கோவிலின் சார்பில் அகிலா என்று பெயர் சூட்டப்பட்டது. அதனை கவனித்துக் கொள்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஜம்புநாதன் என்ற யானை பாகனை நியமித்து பராமரித்து வருகின்றனர்.

பெண் யானை அகிலா கடந்த 2002 மே 24-ந்தேதி பிறந்து அசாம் மாநிலத்திலேயே வளர்ந்தது. 9 1/2 வயதில் திருச்சி திருவானைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அன்று முதல் அகிலாவை கவனித்து வரும் கோவில் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வருடமும் அதன் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அகிலாவிற்கு 21 வயது முடிந்து 22-வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளது. அதற்காக நேற்று பெய்த சாரல் மழையிலும் ஷவரிலும் அகிலா ஆனந்த குளியல் போட்டு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தயாரானது.

இன்று காலையில் யானை அகிலாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவிலை வலம் வர செய்தனர். பக்தர்கள் பலரும் யானைக்கு பழங்கள் கொடுத்து உபசரித்து வணங்கினர். இன்று மாலை 4 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் அகிலாவிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதற்காக ஏராளமான பழங்களை பரிசுகளாக கொடுக்கின்றனர். இந்த பிறந்தநாள் விழாவிலும், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அகிலாவிற்கு பரிசு அளிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News