தமிழ்நாடு

முல்லை பெரியாறு அணையை அடுத்த மாதம் 5 பேர் கொண்ட நிபுணர் குழு நேரில் பார்வையிடுகிறது

Published On 2024-05-30 05:30 GMT   |   Update On 2024-05-30 05:30 GMT
  • குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
  • அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

சென்னை:

மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாற்றின் குறுக்கே முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 131 ஆண்டுகள் பழமையான இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த அணை பலவீனமாக உள்ளதாகவும், இயற்கை சீற்றங்களின் போது அணையை சுற்றி உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் எனவும் கேரளா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் திட்ட அறிக்கை தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

கேரள அரசின் இந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கேரளா அரசு மீறி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

தமிழக விவசாயிகளும் கடந்த சில நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக நேற்று முன்தினம் நடக்க இருந்த நிபுணர் குழு கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் முல்லை பெரியாறு அணையை பார்வையிட மத்திய நீர் ஆணைய நிர்வாக என்ஜினீயர் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் அடுத்த மாதம் (ஜூன்) 13 மற்றும் 14-ந்தேதிகளில் முல்லைப்பெரியாறு அணையை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர்கள் அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

பின்னர் அவர்கள் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மத்திய துணைகுழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News