அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: குறைந்த தூரத்திற்கு ரூ.10 வசூலிக்கப்படுவதாக புகார்
- எக்ஸ்பிரஸ் பஸ் சேவை குறைந்தபட்சம் 120 கி.மீ. வரை செல்ல வேண்டும் என்ற விதி புறக்கணிக்கப்படுகிறது.
- டவுன் பஸ்களுக்கு ஸ்டேஜ், புறநகர் பஸ்களுக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு அதன் சேவையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ், அல்ட்ரா டீலக்ஸ், மாநகர பேருந்து ஆகியவற்றிற்கு தனித்தனியே கட்டண விகிதம் உள்ளது.
நீண்ட தூரம் செல்லும் பஸ்கள், 300 கி.மீ. தூரத்திற்குள் செல்லும் பஸ்கள், டவுன் பஸ்கள் என்ற அடிப்படையில் இயக்கப்படுகின்ற பேருந்துகளுக்கு கட்டணம் வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டவுன் பஸ்களுக்கு 2வது, 3வது மற்றும் 4வது நிலைகளுக்கு (ஸ்டேஷ்) கட்டணம் முறையே ரூ.6, ரூ.7, ரூ.8 ஆக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நிறுத்தங்களுக்கு இடையே உள்ள குறைந்த தூரத்திற்கு கூட பயணிகளிடம் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உதாரணமாக எடுத்து கொண்டால், திருவள்ளூர்-சுங்கச்சாவடி வழித்தடத்தில் நிறுத்தங்கள் 2 கி.மீ. தொலைவில் இருந்தாலும் பயணிகளிடம் ரூ.10 கட்டணம் வசூலிக்கின்றனர்.
சென்னையில் புறநகர் பகுதிகளில் சில பஸ்களில் 1 கி.மீ.க்கும் குறைவான இடைவெளியில் ஸ்டேஜ்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் செயற்கையாக நிறுத்தங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
புறநகர் சேவைகளில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் அதன் சாதாரண சேவைகளுக்கு அனுமதிக்கப்பட்ட 58 பைசாவுக்கு பதிலாக கிலோ மீட்டருக்கு 75 பைசா வசூலிக்கிறது. இந்த அதிக கட்டணம் குறைவான நிறுத்தங்களை கொண்ட எக்ஸ்பிரஸ் பஸ் சேவைக்கானது.
எக்ஸ்பிரஸ் பஸ் சேவை குறைந்தபட்சம் 120 கி.மீ. வரை செல்ல வேண்டும் என்ற விதி புறக்கணிக்கப்படுகிறது. பல பேருந்துகள் விரைவு கட்டணத்தில் 25 கி.மீ. மட்டுமே இயக்கப்பட்டு பயணிகளை ஏமாற்றி வருகின்றன.
அந்த பஸ்களில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் குறைந்தபட்ச கட்டண விதிமுறைகளை மீறியும், பயண தூரத்தின் அடிப்படையில் கட்டணத்தை கணக்கிடுவதில் தவறான முறையில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது.
இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் கேட்டதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டண விகிதப்படி தான் வசூலிக்கிறோம். கூடுலாக வசூலிக்கவில்லை.
டவுன் பஸ்களுக்கு ஸ்டேஜ், புறநகர் பஸ்களுக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களுக்கு 19 ரூபாய் இருந்தால் அதனை 20 ரூபாயாக மாற்றியும் ரூ.21 ஆக இருந்தால் ரூ.20 ஆகவும் நிர்ணயித்து வசூலிக்கிறோம். 2018-ல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட போது என்ன நிர்ணயிக்கப்பட்டதோ அதனை பின்பற்றுகிறோம் என்றார்.